கல்லடி கடல்மீன்கள் கழகம் நடத்திய கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் முதலாம் இரண்டாம் இடங்களை ஏறாவூர் இளந்தாரகை கழகம் வெற்றி கொண்டது.
மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் அனுமதியுடனும் மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட மத்தியஸ்தர்கள் சங்கத்தின் ஆதரவுடனும் கல்லடி கடல் மீன்கள் விளையாட்டுக் கழகம் நடத்திய அணிக்கு ஏழு வீரர்கள் பங்குபற்றும் விலகல் முறையிலான மாபெரும் கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டி கடந்த ஜூன் 09,10,11 .2023 ஆந் திகதிகளில் கல்லடியிலுள்ள மைதானத்தில் பகல் இரவுப் போட்டியாக நடைபெற்றிருந்தது.
இதில் மட்டக்களப்பு மாவட்டக்
கால்பந்தாட்டச் சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள கழகங்களின் அணிகளும், காத்தான்குடி கால்பந்தாட்ட லீக்கில் அங்கத்துவம் பெற்றுள்ள
கழகங்களின் அணிகளும், படுவான்கரை கால்பந்தாட்டச் சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள கழகங்களின் அணிகளும் எனமொத்தம் எழுபது
அணிகள் பங்குபற்றியிருந்தன.
இம்மாபெரும் சுற்றுப் போட்டியின் அரையிறுதிக்கு மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள ஏறாவூர் இளந்தாரகைக் கழகத்தின் ஏ, பி அணிகளும் கல்லடி ஸ்ரீ முருகன் கழக அணியும், சீலாமுனை யங்ஸ்டார் கழக அணியும் தெரிவாகியிருந்தன. இரண்டு அரையிறுதியிலும் ஏறாவூர்
இளந்தாரகை கழகத்தின் இரு அணிகளும் வெற்றி
பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி
ஏ அணி முதலாமிடத்தையும்,
பி அணி இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டன. மூன்றாமிடத்தை கல்லடி ஸ்ரீ முருகன்
அணியும் நான்காமிடத்தை யங்ஸ்டார் அணியும் பெற்றுக் கொண்டது.
மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின்
அங்கத்துவத்துடன் தேசிய சர்வதேச மட்டத்தில்
திறமையினை வெளிக்காட்டி வரும் ஏறாவூர் இளந்தாரகைக்
கழகத்தின் வீரர்களுடைய ஆற்றல்கள் மெச்சும்படியாக இருந்ததாகவும், அரையிறுதியில் சிறப்பான போட்டியை வழங்கிய
சீலாமுனை யங்ஸ்டார், கல்லடி ஸ்ரீ முருகன்
அணிகளுடைய வீரர்களின் ஆற்றல்களும் பாராட்டத்தக்கதாக இருந்ததாகவும் இச்சுற்றுப் போட்டியை இரசித்த கால்பந்து
இரசிகர்கள் கூறுகின்றனர்.
இச்சுற்றுப் போட்டியைச் சிறப்பாக ஒழுங்கமைத்து நடத்திய
கல்லடி கடல்மீன்கள் கழகமும், போட்டிகளுக்கு மத்தியஸ்தம்
வழங்கிய மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட மத்தியஸ்தர்கள்
சங்கத்தின் அங்கத்தவர்களின் சேவையும் பாராட்டுக்குரியதாகும்.
து.கௌரீஸ்வரன்

கருத்துகள்
கருத்துரையிடுக